கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு.. 45 இடங்களில் என்.ஐ.ஏ திடீர் சோதனை..!

0 4189

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் 45 இடங்களில் அதிகாலையில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்.

கோவை கார்வெடிப்பு தொடர்பான வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கோவையில் கோட்டைமேடு, வின்சென்ட் சாலை, கொள்ளுக்காடு, ரத்தினமேடு உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் 45 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகர போலீசாரும் இந்த சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்...

சென்னையில் PFI அமைப்பு தொடர்புடைய இரண்டு இடங்களில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஓட்டேரியில் தாசமக்கான் அருகே சலாவுதீன் என்பவர் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்கேபி நகரில் ஜகுபர் சாதிக் ஜாபர் சாதிக் என்பவர் வீட்டிலும் சென்னை மாநகர போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை கார்வெடிப்பு சம்பவத்தில், காரை விற்பனை செய்த சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த பழைய கார் விற்பனை செய்யும் நிஜாமுதீன் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

கோயம்புத்தூர் உக்கடத்தில் சங்கமேஸ்வரர் கோவில் வாசலில் கடந்த மாதம் 23ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் ஐ.எஸ்.ஆதரவு பயங்கரவாதி என தெரியவந்ததை அடுத்து அவருடன் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேருக்கும், வருகிற 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை, கோயம்புத்தூர் உட்பட 45 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகள், ஏற்கனவே என்.ஐ.ஏ விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் மட்டும் உக்கடம், கோட்டைமேடு, ஜி.எம் நகர் என சுமார் 30 இடங்களிலும், சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி உட்பட 5 இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. ஜமேஷ் முபின் பயன்படுத்திய கார் பல பேரிடம் கைமாறியது விசாரணையில் தெரிய வந்த நிலையில், காரை பயன்படுத்திய நபர்களின் பட்டியலை தயாரித்து அவர்களது வீடுகளிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில், கார் விற்பனையில் ஈடுபட்டதாக புதுப்பேட்டையை சேர்ந்த நிஜாமுதின் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் அப்துல் பாசித் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், திருப்பூரில் ஜமேசா முபினின் உறவினரான முகமதி யூசுப் என்பவரை அழைத்துச் சென்று 3 மணி நேரமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களின் வீடுகளில் தமிழக போலீசாரும் தனியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 18 பேர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் ஓட்டேரியை சேர்ந்த சலாவூதின், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் ஆகியோரின் வீடுகள் உட்பட 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments