குடும்ப சண்டையால் நேர்ந்த விபரீதம்.. நைலான் கயிற்றால் நெரித்து தந்தை படுகொலை.. தாய்-மகன்-மகள் கூட்டாக கைது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே குடும்ப சண்டை காரணமாக தந்தையை கயிற்றால் இறுக்கி கொலை செய்து இயற்கை மரணம் என நாடகம் ஆடிய தாய், மகன் மற்றும் மகள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்த பின்னர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் மனைவி மட்டுமின்றி குழந்தைகளிடமும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆறுமுகத்தின் அக்கா மகள் வீட்டுக்கு வந்தது தொடர்பாக குடும்பத்தினருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 6ந்தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ஆறுமுகம் உறங்கி விட்டதாகவும் , காலையில் சென்று பார்த்த போது அவர் இறந்த நிலையில் இருந்ததாகவும் உறவினர்களிடம் தீபா கூறியுள்ளார்.
தகவல் அறிந்து வந்த ஆறுமுகத்தின் பெரியப்பா மகன் முருகன் என்பவர், ஆறுமுகத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கழுத்தில் காயம் உள்ளதாகவும் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதனை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் தீபா, மகன் மற்றும் மகளிடம் கிடுக்கிப் பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவி, மகன், மகள் சேர்ந்து கூட்டாக ஆறுமுகத்தை நைலான் கயிறு மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார் தீபா, 17 வயது மகன், 15 வயது மகள் ஆகியோரை கைது செய்தனர். தீபாவை கடலூர் மத்திய சிறைக்கும் மகன் மற்றும் மகளை கூர்நோக்கு பள்ளிக்கும் அனுப்பப்பட்டனர்.
Comments