9 போலி வங்கிகள் நடத்தி மெகா மோசடி ரிசர்வ் வங்கி ஷாக்..! சென்னை போலீஸ் அதிரடி..!
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றது போன்று போலியான சான்றிதழை உருவாக்கி சென்னை உட்பட ஒன்பது நகரங்களில் போலியான வங்கி நடத்தி வந்த மோசடி மன்னனை சென்னை வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
ரிசர்வ் வங்கியின் மண்டல பொது மேலாளர் சென்னை காவல்துறையை தொடர்பு கொண்டு தெரிவித்த புகாரில், தமிழகத்தில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிட், என்ற பெயரில் போலியான வங்கியை தொடங்கி, பொதுமக்களை வாடிக்கையாளர்களாக இணைத்து மோசடி செய்யும் நோக்கத்தில் அந்த வங்கி செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியதில், சென்னை அம்பத்தூரில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில், அதன் கார்ப்பரேட் அலுவலகம் இயங்கி வந்ததும், சேலம், விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை, உள்ளிட்ட ஒன்பது இடங்களில் இதன் வங்கி கிளைகளை தொடங்கி அதன் மூலம் சுமார் 3,000 வாடிக்கையாளர்களுக்கு கணக்கு தொடங்கி கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வங்கியை நடத்தி வந்த சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த சந்திரபோஸ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்தே முதலில் நிதி நிறுவனம் போன்று தொடங்கி பின்னர் வங்கியை போன்று செயல்பட்டு வந்துள்ளார்.
விவசாய கடன், பெண்களுக்கான கூடுதல் சலுகையுடனான கடன், தனி நபர் கடன், வாராந்திர மற்றும் மாதாந்திர கடன் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் வாடிக்கையாளர்களை இணைத்து அந்த வங்கியில் முதலீடு செய்ய வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில், இந்த வங்கியை RAFC சொசைட்டி என்ற பெயரில் ஒரு நிறுவனமாக போலி ஆவணத்தை காண்பித்து அதை வைத்து ஐசிஐசிஐ வங்கியில் கார்ப்பரேட் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
அதன் மூலம் ஊழியர்கள் பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் தனது நிறுவனத்திற்கு உள்ள கார்ப்பரேட் கணக்கு மூலம் ஆயிரக்கணக்கான கிளை கணக்குகளை தொடங்கி, ஐசிஐசிஐ வங்கியின் வங்கி அட்டைகளை அந்த வங்கியின் பெயரை மறைத்து மோசடி போலி வங்கியான ஆர்ஏஎஸ்சி என்ற பெயரை அதில் ஒட்டி வைத்து தங்கள் போலி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்தப் போலி வங்கியின் பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள கணக்குகளில் இருந்து சுமார் 57 லட்சம் ரூபாயை முடக்கியுள்ளதாகவும், வங்கியில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கானோர் இது போலி வங்கி என்று தெரிந்தே பணிபுரிந்தார்களா? என்று விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ரிசர்வ் வங்கியின் போலியான அனுமதி சான்று, போலியான வங்கி முத்திரைகள், போலியான ஆவணங்கள், போலியான வங்கி கணக்கு புத்தகங்கள், போன்றவற்றை கைப்பற்றி அவற்றை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்திரபோஸ் லண்டனில் எம்.பி.ஏ படித்தவர் எனவும், வங்கி செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு போலியான வங்கியை தொடங்கி கோடி கணக்கில் பணம் சுருட்டும் திட்டத்துடன் செயல்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திர போஸின் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
Comments