ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில் அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள்..!
தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன்கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் 7 அடி உயரம் உள்ள ஆகாச லிங்கத்திற்கு 108 கிலோவில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் மனோன்மணி அம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர், மாயூரநாதர், நல்லத்துக்குடி ஜலகண்டேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட கீழையூர் வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நெல்லை மாவட்டம் செப்பரை அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னபூரணி நாயகனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
Comments