சினிமா ஆசையால் இன்ஸ்டாவில் விழுந்த பெண் படுகொலை..! கணவன் செய்த சம்பவம்

0 5882

திருப்பூரில் இன்ஸ்டா ரீல்ஸுக்கு அடிமையான பெண் ஒருவர் சினிமா வாய்ப்புத்தேடி சென்னை சென்று திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டார். திருமண வயதை தொட்ட மகள்களை கண்டு கொள்ளாமல் ரீல்ஸ் செய்து சுற்றிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம், இவரது மனைவி சித்ரா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சித்ரா, இன்ஸ்டாகிராம்ல் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் ஆர்வமாக இருந்தார்.

உடன் வேலைப்பார்பவர்களும், ரீல்ஸுக்கு கமெண்ட் செய்யும் நபர்களும் எல்லாம் சித்ராவை பார்ப்பதற்கு சினிமா நடிகை போல இருப்பதாக ஏற்றி விட்டுள்ளனர். இதனை உண்மை என்று நம்பி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சித்ராவுக்கு தீராத தாகம் ஏற்பட்டுள்ளது.

இதனை அவரது கணவர் அமிர்தலிங்கம் கண்டித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயதுக்கு வந்த இரு மகள்களையும், தனது கணவனையும் தவிக்கவிட்டு தனது இன்ஸ்டாகிராம் நண்பர்களின் அழைப்பை ஏற்று சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்து செல்போனில் அழைத்து கணவர் அமிர்தலிங்கம் கடுமையாக கண்டித்துள்ளார். அதனை மீறி சித்ரா சென்னையில் சில மாதங்கள் தங்கி இருந்துள்ளார்.

மனைவியை கேட்காமல் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார் அமிர்தலிங்கம், தகவல் அறிந்து கடந்த வாரம் சென்னையில் இருந்து மகள் திருமணத்திற்காக திருப்பூருக்கு திரும்பி வந்துள்ளார் சித்ரா.

அப்போது சினிமாவில் நடிப்பது தொடர்பாக சித்ராவை அமிர்தலிங்கம் கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபித்துக் கொண்டு சித்ரா அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது மகள், தாய் சித்ராவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே காலை நீண்ட நேரமாக அவர்களது வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, கழுத்தில் காயங்களுடன் அங்கே சித்ரா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அமிர்தலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் சினிமாவுக்கு சென்று தனது மகள்களின் வாழ்க்கையை நிற்கதியாக்கியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கைதான கணவன் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments