ஈவ்டீசிங் கும்பல் 16 பேரை தட்டி தூக்கியது போலீஸ்..! இனிமேல் ஆடினால் ஆப்புதான்..!
மதுரை மகளிர் கல்லூரிக்குள் பைக்கில் புகுந்து ரகளை செய்ததோடு, தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை போதை கும்பல் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 6 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரி மாணவிகளை சாலையில் பிடித்து இழுத்து ரகளை செய்த மர்ம கும்பல் ஒன்று இரு சக்கரவாகனத்துடன் கல்லூரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கி ரகளை செய்தது
30ந்தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 2ந்தேதி மீண்டும் கல்லூரி வாசலுக்கு இரு சக்கர வாகனங்களில் சென்ற கஞ்சா போதை கும்பல் கல்லூரி விட்டு வெளியே வந்த மாணவிகளை கிண்டல் செய்தது. இதனை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை ஹெல்மெட்டால் அடித்து கீழே தள்ளியது.
இந்த இரு சம்பவங்களின் வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் மதுரை மாநகர காவல்துறையினருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.
பள்ளிக்கல்லூரிகளின் முன்பு காலை மற்றும் மாலை வேலைகளின் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ள நிலையில், இந்த சம்பவங்களுக்கு போலீசாரின் ரோந்துப்பணியில் ஏற்பட்ட தொய்வே காரணமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட செல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். ஒரு குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் , மற்றொரு குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் என மொத்தம் 16 பேரை கைது செய்ததோடு, 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ததாக அறிவித்துள்ள மதுரை மாநகர போலீசார் இந்த சம்பவத்தின் தொடர்புடைய திருநா, முத்து ஆகியோரை வலை வீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொள்ளும், நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
Comments