கணவனுக்கு திதி கொடுத்த பெண்ணுக்கு நள்ளிரவில் நிகழ்ந்த கோர சம்பவம்..! பிரிட்ஜ் வெடித்தது ஏன்?

0 6839

செங்கல்பட்டு அருகே வீட்டிலிருந்த பிரிட்ஜ் வெடித்ததில், அதிலிருந்த கேஸ் கசிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்தவர் கிரிஜா. இவரது கணவர் வெங்கட்ராமன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார். அதற்கு பிறகு கிரிஜா, துபாயில் வசிக்கும் தனது மகள் பார்கவி வீட்டுக்கு சென்று அங்கேயே வசித்து வந்தார். 

வெங்கட்ராமனுக்கு முதலாமாண்டு திதி கொடுப்பதற்காக கிரிஜா, மகள் பார்கவி, அவரது கணவர் ராஜ்குமார், மற்றும் பேத்தி ஆரத்யா ஆகியோர் நேற்று துபாயில் இருந்து ஊரப்பாக்கம் வந்துள்ளனர். இவர்களை சந்திக்க துரைப்பாக்கத்தில் இருந்து கிரிஜாவின் தங்கை ராதா என்பவரும் வந்திருந்தார்.

வியாழக்கிழமை இரவு சாப்பிட்ட பிறகு, கிரிஜா மற்றும் ராதா ஒரு அறையிலும், பார்கவி, அவரது கணவர் மற்றும் மகள் ஒரு அறையிலும் படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து, வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த ராஜ்குமார் அறையில் இருந்து வெளியே வந்து அக்கம் பக்கத்தினரை அழைக்க முயன்றதாகவும், யாரும் வராததால் தனது மனைவி, மகள் இருந்த அறையை பூட்டிவிட்டு அவர் கழிவறைக்கு சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீடு முழுக்க கரும்புகை சூழ்ந்ததில், கதவு, ஜன்னல் என அனைத்தும் மூடியிருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கிரிஜா, அவரது தங்கை ராதா, கழிவறையில் பதுங்கிய ராஜ்குமார் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு அறைக்குள் இருந்த பார்கவி மற்றும் அவரது மகள் ஆரத்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு அறையில் இருந்து கிரிஜா மற்றும் ராதாவின் சடலங்களையும், கழிவறையில் இருந்து ராஜ்குமாரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த ஓராண்டாக பிரிட்ஜ் உபயோகப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் மின்கசிவு ஏற்பட்டு பிரிட்ஜ் வெடித்ததும் அதிலிருந்த கேஸ் கசிந்து மூவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாதக் கணக்கில் உபயோகப்படுத்தப்படாத ஃபிரிட்ஜ் மற்றும் ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எலக்ட்ரீஷியனை வைத்து முறையாக பரிசோதித்த பிறகே உபயோக படுத்தவேண்டும் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments