விவசாயத்தில் லட்சாதிபதியாகனுமா இந்த பழத்தை பயிரிடுங்க..! தண்ணீர் பற்றாக்குறை கவலை வேண்டாம்
வெளிநாடுகளிலேயே அதிகளவு பயிரிடப்படும் டிராகன் பழங்களை பயிரிட்டு தமிழக விவசாயிகள் லட்சக் கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றனர். தண்ணீர் பற்றக்குறை உள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு வர பிரசாதமாக அமைந்துள்ள டிராகன் பழ விவசாயம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
மருத்துவ குணங்கள் நிறைந்த டிராகன் பழங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே பயிரிடப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் வியட்நாம், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து டிராகன் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
90களின் பிற்பகுதியில் இந்தியாவில் விவசாயத்திற்கு அறிமுக டிராகன் பழ செடிகள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பயிரிடப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் டிராகன் பழங்களை பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருப்பதாலும் பராமரிப்பு மிக குறைவாக இருப்பதாலும், அதிக லாபம் ஈட்ட முடிவதாலும் டிராகன் பழங்களை விளைவிக்க தொடங்கியிருப்பதாக தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஓசூரைச் சேர்ந்த கோபி என்ற இளம் விவசாயி, தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், யூ டியூப் மூலம் டிராகன் பழ விவசாய முறையை அறிந்து அதனை பயிரிட்டுள்ளார். ஆரம்பத்தில் பயிரிடுவதற்கு அதிகளவு செலவு ஆனாலும் 2 ஆண்டுகளில் அந்த பணத்தை திரும்ப பெற்றுவிடலாம் என்றும் அதற்கு பிறகு ஓராண்டுக்கு, ஒரு ஏக்கருக்கு சுமார் 10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்று கோபி தெரிவித்தார்
இதே போல, 5 ஆண்டுகளாக டிராகன் பழங்களை விளைவித்து வரும் திருத்தணியைச் சேர்ந்த வெங்கடபதி என்ற விவசாயி, டிராகன் பழங்கள் ஒரு கிலோ 130 முதல் 150 வரையில் விற்பனை ஆவதால் நல்ல லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு டிராகன் பழ விவசாயம் ஓர் வர பிரசாதமாக அமைந்துள்ளதாகவும், தங்களைப் போலவே மற்ற விவசாயிகளும் டிராகன் பழங்களை பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம் என்றும் இந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Comments