குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்ததால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார் 500 பேர் மோர்பி நகரிலுள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை திரண்டிருந்தனர். சுற்றுலாத் தலமாக விளங்கும் அந்த பாலத்தில் அதிகளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக திடீரென அந்த தொங்குப் பாலம் அறுந்து விழுந்தது. குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர். பலர் பாலத்தின் விழுந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி உயிருக்குப் போராடினர்.
இது பற்றி அறிந்ததும் உள்ளுர் மக்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் முதலில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் இருந்து சடலங்கள் மீட்கப்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும் 177 பேர்மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என கூறப்படுகிறது. விடியவிடிய நடைபெற்ற மீட்புப்பணிகளில் முப்படைகள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களும் ஈடுபட்டனர்.
அங்கு போதிய மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்ததும் மீட்பு பணிக்கு பின்னடைவாக இருந்தது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தொங்குப்பாலம் பழுதடைந்ததால், புனரமைக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. அரசின் டெண்டரைப் பெற்று தனியார் நிறுவனம் ஒன்று இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளது. பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாயும், மத்திய அரசு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து குஜராத்தில் இன்று பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
Comments