''விரைவில் உள்நாட்டில் பயணிகள் விமானம் தயாரிப்பு'' பிரதமர் மோடி அறிவிப்பு..!
குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 ரக ராணுவ சரக்கு விமானத் தொழிற்சாலைக்கு, அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, விரைவில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பயணிகள் விமானமும் தயாரிக்கப்படும் என அறிவித்தார்.
இந்திய விமானப்படையில் தளவாடங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக, ஆவ்ரோ-748 ரக விமானங்களை பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், அதனை மாற்றவும், அதற்கு பதிலாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சி-295 ரக விமானங்களை வாங்கவும் முடிவு செய்த மத்திய அரசு, 21 ஆயிரம் கோடி ரூபாயில் 56 விமானங்களை வாங்க, கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி, 16 விமானங்கள் ஸ்பெயினில் இயங்கும் ஏர் பஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 2023 முதல் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
எஞ்சிய 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் வகையில் ஏர்பஸ் நிறுவனம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, குஜராத் மாநிலம் வதோதராவில், 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சி-295 ரக போக்குவரத்து விமானங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவ திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விமான தயாரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், உலக அளவில் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருவதாகவும், 'மேக் இன் இந்தியா' மற்றும் 'மேக் ஃபார் வோர்ல்ட்' ஆகிய அணுகுமுறையுடன் நாடு மேலும் வலுப்பெற்று வருவதாகவும் கூறினார்.
வதோதராவில் சி-295 விமானங்களைத் தயாரிப்பது நமது ராணுவத்திற்கு மேலும் வலிமையை அளிப்பதாக இருக்கும் என குறிப்பிட்ட பிரதமர், விரைவில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் பயணிகள் விமானம் தயாரிக்கப்படும் என்றார். வதோதரா ஆலையில், 2031ம் ஆண்டுக்குள் 40 விமானங்களும் தயாரிக்கப்பட்டு
மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படள்ளன.
Comments