பைக்கில் வலம் வந்து இளைஞர்கள் அடாவடி.. எச்சரித்து அனுப்பிய போலீசார்..!

0 3240

சென்னை த்தில் தலைக்கவசம் அணியாததுடன், அதிக ஒலி எழுப்பியபடி பைக்குகளில் வலம் வந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டமானது சென்னை நந்தனம் அருகில் உள்ள தேவர் சிலை அருகே நடைபெற்றது.

இந்த பிறந்தநாள் விழாவில் பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வந்த நிலையில், நந்தனம் வழியே செல்லும் அண்ணாசாலையில், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு உயர் தர இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் தலா 3 பேராக இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அதனைக் கண்ட காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, மெதுவாக செல்லுமாறு அறிவுரை கூறியபோது, தாங்கள் என்ன கேஸ் போடுவீர்களா? என கூட்டத்தில் இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார், வாகனத்தில் வந்த இளைஞர்களை பிடித்தும் அவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதலும் செய்தனர்.

இந்நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்ததற்கான சரியான காரணத்தை கேட்டபோது, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தலைகவசம் அணியாததால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தரப்பிலிருந்து விளக்கமளித்தனர். இதன்பின் வாகனங்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி இளைஞர்கள் நீண்ட நேரமாக காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின் வாகனங்களை பறிமுதல் செய்து ஏற்றி செல்லும் போலீஸ் ரெகவர் வேன் வரவே, வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களும், அவர்களுக்கு சிபாரிசு செய்ய வந்த அமைப்பினரும் காவல்துறையினரிடம் சலசலப்புடன் கூடிய வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் சுற்று வட்டாரத்தில் நெடு நேரமாக பதற்றம் நீடித்து வந்த நிலையில், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர, சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திர நாயர், துணை ஆணையர் தேஷ்முக் சேகர் மற்றும் உதவி ஆணையர்கள் அங்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர்களை மன்னிப்பு மட்டும் கேட்க வைத்த காவல் துறையினர் வழக்குகள் எதும் பதிவிடாமல் அவர்களின் வாகனங்களை ஒப்படைத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments