பிச்சை எடுக்காமல் உழைத்து சாப்பிட்டது குத்தமா நியாயமாரே? திறக்கப்படுமா மாற்றுத்திறனாளியின் கடை?

0 4850

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் 18 வருடமாக மாற்றுத்திறனாளி பெண் நடத்தி வந்த பெட்டி கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்த நிலையில், முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்ததால் தான் கடையை பூட்டியதாக அதிகாரி ஒருவர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ரேவதி. 48 வயதான இவர் தனது உடல் குறைபாட்டை காட்டி பிச்சை எடுக்காமல் கடந்த 18 வருடங்களாக விருத்தாச்சலம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து உழைத்து பிழைப்பு நடத்தி வந்தார். அவரது மகன் உதயகுமாரும் மாற்றுத் திறனாளி என்பதால் இந்த கடையை நடத்தி அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக கடை இருப்பதாக கூறி விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கடையை காலி செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர், தான் மாற்றுத் திறனாளி என்பதால் தனக்கு விருத்தாச்சலம் பஸ் நிலையத்தில் தொடர்ந்து கடை நடத்த அனுமதி அளிக்க வேண்டும், வாடகை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விருத்தாசலம் நகராட்சி அலுவலகர்கள் , மாற்றுத்திறனாளி பெண் நடத்தி வந்த கடையை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். கடந்த 10 மாதங்களாக இவரது கடை பூட்டி கிடக்கிறது. இந்நிலையில் இவர் கடையை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கூறி விருதாச்சலம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த அலுவலரிடம் முறையிட்டுள்ளார்.

அப்போது அந்த அதிகாரி நீங்கள் ஏன் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு கொடுத்தீர்கள், அதனால் தான் தங்கள் கடைக்கு சீல் வைக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும் தன்னால் வாடகை கொடுக்க முடியாது, நான் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறேன் எனக் கண்ணீரில் கதறி அழுவதை மனுவில் எழுத்தாக எழுதிக்கொடுக்கும்படி கூறி உள்ளார்

மாற்றுத்திறனாளி பெண் ரேவதியோ, தன்னால் வாடகை கொடுத்து கடையை நடத்த முடியும் என்றும் அதனால் தனக்கு அந்த கடையை மீண்டும் நடத்த அனுமதி அளித்து தன்னிடமிருந்து வாடகையை வசூலிக்க வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் .

தனது வாழவாதாரத்திற்கு உதவ வேண்டி மீண்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்துள்ள மாற்றுத்திறனாளி பெண் ரேவதி தனக்கு கடை கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments