ஏர்பஸ் - டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

0 3107

குஜராத் மாநிலம் வதோதரா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைக்கப்படவிருக்கும் சி-295 ராணுவ சரக்கு விமானத் தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ-748 ரக விமானங்களை மாற்றவும், அதற்கு பதிலாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சி-295 விமானங்களை வாங்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.

21 ஆயிரம் கோடி ரூபாயில் 56 விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கையெழுத்தானது. இதன்படி 16 விமானங்கள் ஸ்பெயினில் இயங்கும் ஏர் பஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு செப்டம்பர் 2023 முதல் 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

மீதமுள்ள 40 விமானங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஏர்பஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கப்படும். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து விமானங்களைத் தயாரித்து வரும் ஏர்பஸ் நிறுவனம் 12வது நாடாக இந்தியாவுடன் இணைந்தும் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. 2031ம் ஆண்டுக்குள் 40 விமானங்களும் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வதோதராவில் அமைக்கப்பட இருக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாதுகாப்புத் துறையில் தனியாரை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது அமையும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின்கீழ் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தளவாடங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments