மாணவனுக்கு ஜூஸில் விஷம் வைத்தாரா தோழி..? போலீஸ் தீவிர விசாரணை
கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவரை வீட்டுக்கு அழைத்து தோழி விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து கொலை செய்ததாக மாணவனின் குடும்பத்தினர் அளித்துள்ள புகார் அளித்திருந்த நிலையில், பேருந்தில் அறிமுகமான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக - கேரள எல்லை பகுதியான பாறசாலையை சேர்ந்த சாரோன் ராஜ் என்பவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வந்தார். பேருந்தில் கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகிவந்த நிலையில், இளம்பெண்ணிற்கு அவரது வீட்டில் வரன் தேட தொடங்கினர்.
கடந்த 17-ம் தேதி தோழியின் அழைப்பை ஏற்று நண்பர் ரெஜின் என்பவருடன் அவரது வீட்டிற்கு சாரோன்ராஜ் சென்றுள்ளார். அப்போது ரெஜினை வெளியே நிற்கவைத்துவிட்டு, சாரோன்ராஜை மட்டும் வீட்டிற்குள் அழைத்து சென்று அவருக்கு ஜூஸ் கொடுத்ததாகவும், தோழி கொடுத்த ஜூஸை குடித்த சிறிது நேரத்தில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் சாரோன்ராஜ் தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சாரோன்ராஜ் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், இளம் பெண் கொடுத்த ஜூஸ் குடித்ததால் தனது மகனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாக சாரோன் ராஜின் தந்தை ஜெயராஜ், பாறசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து இருக்கலாம் என சாரோன் ராஜின் குடும்பத்தினர் குற்றம்சாட்டும் நிலையில், இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதி பள்ளியில் கோலா பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து பள்ளிச்சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் மர்மமே விலகாத நிலையில் கல்லூரி மாணவனுக்கு காதலியே விஷம் வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments