ரியல் வந்தியதேவன் திருமணத்தை நிறுத்திய நிறைமாத கர்ப்பிணி..! மாப்பிள்ளை அழைப்பு நடத்திய போலீஸ்

0 5230

மதுரை அருகே ரகசிய திருமணம் நடத்தி கைவிட்ட பொறியாளரின் திருமணத்தை மண்டபத்துக்கே சென்று நிறைமாத கர்ப்பிணி ஒருவர், தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒட்டுபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மகள் நாகபிரியா இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நாகபிரியாவுக்கு உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த சிவில் என்ஜீனியர் சின்னசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சின்னசாமி, நாகப்பிரியாவை கடந்த இரண்டு வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நாகபிரியாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி எல்லை மீறியதால் அவர், கர்ப்பமானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வத்தலங்குண்டு புற நகர் பகுதியில் ரகசியமாக தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது நாகபிரியா 9 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவரை தவிக்கவிட்ட சின்னசாமி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

திருமண பத்திரிகை அடித்து திருமண ஏற்பாடுகளை வாலிபரின் குடும்பத்தினர் விமரிசையாக செய்தனர். திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை திருமணத்திற்கான ஏற்பாடுகள் களைகட்டியது.

இந்த நிலையில் தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறும் தகவல் அறிந்த நாகபிரியா தனது பெற்றோரிடம், சின்னச்சாமியுடன் காதலில் விழுந்ததால் நிகழ்ந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார்.

காவல் அவசர உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு புகாரும் தெரிவித்தார். போலீசாருடன் வியாழக்கிழமை இரவு திருமண மண்டபத்திற்கு சென்று மணமகன் சின்னசாமி தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறி தனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் எனக் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணி பெண் என்பதால் போலீசார் காலையில் பேசிக் கொள்ளலாம் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில்., வெள்ளிக்கிழமை காலை திருமண மண்டபத்திற்கு தனது பெற்றோருடன் வந்த நாகப்பிரியா திருமண மண்டபத்திற்கு நேரடியாக சென்று நியாயம் கேட்டதால், மணமகன் வீட்டாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் பெண் வீட்டார் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

நாகப்பிரியா கொடுத்த புகாரில் புதுமாப்பிள்ளை சின்னசாமியை காவல் நிலையம் அழைத்துச்சென்ற திருமங்கலம்அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments