படிக்கட்டில் தொங்கி தவறிவிழுந்து பலியான 11 ஆம் வகுப்பு மாணவர்..!
அரசு பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்த மாணவன் தவறி விழுந்து பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் சிக்கிய பலியான விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பாபு சரஸ்வதி தம்பதியரின் மகன் யுவராஜ். இவர் மாம்பாக்கம் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார், சம்பவத்தன்று காலை தாம்பரத்தில் இருந்து மகாபலிபுரம் செல்லும் அரசு பேருந்தில் முன்பக்க படிக்கட்டியில் சக மாணவர்களுடன் தொங்கிக் கொண்டு பயணித்தார்.
பேருந்து மேலக்கோட்டையூர் அருகே சென்ற போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த யுவராஜ், பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கினார்.
உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், உயிருக்கு போராடிய யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். படிக்க சென்ற அவர் ஸ்டைல் என்று படிக்கட்டில் தொங்கி தவறி விழுந்து பலியான சம்பவத்தால் அவருடன் பயணித்த மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டனர். படிக்கட்டில் பயணம் நொடியில் மரணம் என்று பலமுறை எச்சரித்தும் கேட்காததால் ஒரு மாணவரின் உயிர் பறிபோயிருப்பதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர். அதே நேரத்தில் படிக்கட்டில் பயணிக்க வேண்டாம் என்று முன் எச்சரிக்கையாக அறிவுறுத்தும் நடத்துனரை மாணவர்கள் தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றது.
Comments