நடைபாதைகள் நடப்பதற்கா.. ? தெருவோர கடைகளுக்கா..? கடைக்கு அனுமதி கோரும் கவுன்சிலர்கள்
பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருவோர கடைகளுக்கு தங்கள் மூலமாக அனுமதி வழங்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த நிலையில் நடைபாதையை, கடைகள் வைக்க தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று துணைமேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
பெரு நகர சென்னை மாநகராட்சியின் அக்டோபர் மாத மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் ப்ரியா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மற்றும் அனுமதி குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது 152 வது வார்டு திமுக கவுன்சிலர் பாரதி பேசுகையில், "சென்னை மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை மாமன்ற உறுப்பினர்களிடம் வழங்கினால் மாமன்ற உறுப்பினர்களுக்கு வசதியாக இருக்கும்", என்றார்.
அதேபோல, மண்டலக்குழு தலைவரான நொளம்பூர் ராஜன் பேசுகையில், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அனுமதி வழங்கும் குழுவில் யார் யாரெல்லாம் உள்ளனர்? கடந்த 2017-ல் மாமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகள் மட்டும் இடம் பெற்றிருந்தனர். தற்போது தேர்தல் நடைபெற்று மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதனை கருத்தில் கொள்ள வேண்டும்", என்றார்.
இவர்களுக்கு இடையே பேசிய மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், "நடைபாதைகளில் நடைபயணிகளின் சிரமத்தை போக்க நடைமேடைகளில் நோ பார்க்கிங் என போர்டு வைப்பது போல, நடைபாதைகளில் தெருவோர கடைகள் வைக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்", என்று கருத்து தெரிவித்தார்.
அதே நேரத்தில் பொது போக்குவரத்தை ஊக்கு விக்கும் வகையிலும், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையிலும் நடை பாதைகளில் உள்ள கடைகளை அகற்றி நடந்து செல்வதற்கு உண்டான ஏதுவான சூழ் நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments