'உள்பிரகாரத்தில் யாகங்கள் நடத்தக்கூடாது..' திருப்பதி போல் தமிழக கோயில்களிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் - நீதிபதிகள்
தமிழக கோவிலில் உள்பிரகாரத்தில், தனிநபர் யாகம், சிறப்பு யாகங்கள் நடத்த தடைவிதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோவில் செல்வோர் உண்மையான பக்தியுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. செயலாளர் சித்ரங்கநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் நாட்களில் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கமாக இருந்த நிலையில், இந்தாண்டு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான விசாரணையில், உள்பிரகாரத்தில் தங்க அனுமதி இல்லை என்ற அரசின் நிலைப்பாடு மிகச்சரியானது என நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. திருப்பதி கோயிலில் இதுபோல் விரதம் இருக்க முடியுமா? என்றும் தமிழக கோயில்கள் மட்டும் சத்திரமா? என்றும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.
மேலும், திருச்செந்தூர் கோயிலில் பணம் கொடுத்தால் உடனே தரிசிக்க முடியும் என்ற நீதிபதிகள், கோயில் பணக்காரர்களுக்கானது இல்லை என்றும் கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றும் குறிப்பிட்டனர்.
Comments