சென்னை சென்டர் மீடியன் மின் கம்பத்தில் ஷாக்.. பலியான ஐடி ஊழியர்.. சாலையில் கிடந்த மின் வயரால் விபரீதம்..!

0 5234

மடிப்பாக்கத்தில் சாலையின் சென்டர் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்த நிலையில், சாலையை கடக்க முயன்ற ஐ.டி ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்...

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ஐ.டி.ஊழியர் இளவரசன். மடிப்பாக்கம் பகுதிக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நண்பர் அலெக்ஸாண்டருடன் காரில் சென்றார். மடிப்பாக்கம் பிரதான சாலையில் தந்தை பெரியார் நகர் அருகே சாலையின் ஓரமாக தனது காரை நிறுத்தி விட்டு இருவரும் சாலையின் நடுவில் சென்டர் மீடியனில் உள்ள மின் கம்பத்தின் இடைவெளி வழியாக மளிகை பொருட்களை வாங்க சென்றுள்ளனர்.

முதலில் அலெக்சாண்டர் என்பவர் மின்கம்பத்தை தொடாமல் அருகில் பிரிந்து பராமரிப்பின்றி கிடந்த மின்வயர்களை மிதிக்காமல் சாலையை எச்சரிக்கையாக கடந்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையை கடந்த இளவரசன் அந்த மின்கம்பத்தை தொட்டவாறு மின்சார வயரின் மீது மிதித்ததாக கூறப்படுகின்றது. இதில் இளவரசன் மின்சாரம் தாக்கி அங்கேயே சுருண்டு விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அலெக்சாண்டர், சக வாகன ஓட்டிகள் மூலம் இளவரசனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றுள்ளார்.இளவரசன் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை அங்கே இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளவரசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மடிப்பாக்கம் போலீசார், இளவரசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார்,மின்சாரத்தால் தாக்கப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மழை நேரம் என்பதை மறந்து, சென்னை மாநகராட்சி மின்வாரிய ஊழியர்கள் முறையாக பராமரிக்காமல் சாலையின் நடுவில் பாதசாரிகள் கடந்து செல்லும் சூழலில் மின்வயரை ஆபத்தான முறையில் விட்டுச்சென்ற அலட்சியத்தால் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று மின்கம்ப இடைவெளி வழியாக சாலையை கடப்பதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ள நிலையில், இந்த சாலை மட்டுமல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அலட்சியமாக விட்டு வைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் இருந்து வரும் வயர்களை, அடுத்து ஒரு உயிரிழப்பு ஏற்படும் முன் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY