கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்ற திருடன் - 'அலாரம்' ஒலித்ததால் தப்பியோட்டம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையிலுள்ள தழுவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்திற்குள் புகுந்து, உண்டியலை உடைத்த திருடன், பலத்த சத்தத்துடன் அலாரம் ஒலித்ததால், சுவரேறி குதித்து தப்பியோடினான்.
அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறி கிடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை வாசலில் நிறுத்திவிட்டு, கோவிலுக்குள் புகுந்தது தெரியவந்தது.
மதில் சுவர் அருகே கிடந்த செல்போன், வாசலில் நின்ற இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த வாரம் இதே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்தபோது, அலாரம் சத்தத்தால் பயந்தோடிய திருடன், பட்டாசு சத்தத்தில் அலாரம் சத்தம் கேட்காது என்றெண்ணி, மீண்டும் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments