" இந்தியாவின் ஆளுமைக்கு கார்கில் வெற்றியே சான்று" எதிரிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை...
கார்கிலில், ராணுவ வீரர்களுடன், பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்தியா எப்போதும் போரை முதலில் தேர்வு செய்ததில்லை எனவும், அமைதியை விரும்பும் நாடு என்றும், பிரதமர் அப்போது தெரிவித்தார்.
வீடு- உறவுகளை மறந்து, நாட்டை காக்கும் ஒரே உன்னத நோக்குடன், எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகையை, அவர்களுடன்,பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு, கார்கில் பனிமலைச் சிகரத்தில்,ராணுவ வீரர்களுடன், பிரதமர் தீபாவளியை கொண்டாடினார்.
வீரர்கள், அதிகாரிகளுக்கு இனிப்புகள் ஊட்டி, தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ராணுவ இசைக்குழுவினரின் தேசபக்தி பாடல்களையும் ரசித்தார்.
ராணுவத்தினருடன் இணைந்து, கைகளை உயர்த்தி, பிரதமர் தேசபக்தி முழக்கமிட்டார்.
தீமை முடிவுக்கு வந்ததே, தீபாவளி பண்டிகை என்றும், கார்கில் அதனை நிரூபித்துக் காட்டியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கார்கில் வெற்றியை, பிரதமர் அப்போது நினைவு கூர்ந்தார்.
இந்தியா எப்போதும் போரை முதலில் தேர்வு செய்ததில்லை என்றும், அமைதியை விரும்பும் நாடு எனவும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் உள்ளேயும், வெளியேயும் எதிரிகளை நாம் திறம்பட எதிர்கொள்வதால், உலகளவில் இந்தியாவின் கௌரவம் உயர்ந்துகொண்டே செல்வதாகவும், பிரதமர் மோடி, பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Comments