சட்டக் கல்லூரி மாணவர்களை ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்கள் விரட்டி விரட்டி தாக்கியது ஏன் ..? 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 8572

திருப்பதி சட்டக்கல்லூரிக்கு தேர்வெழுத சென்று விட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், புத்தூர் எஸ்.வி புரம் சுங்கச்சாவடி ஊழியர்களால் இரும்பு கம்பியால் அடித்து விரட்டி  தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

சென்னையில் இருந்து திருப்பதி சட்டக்கல்லூரிக்கு தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை மாலையில் சென்னை திரும்பி உள்ளனர்

புத்தூர் அடுத்த வடமலைபட்டி எஸ்.வி புரம் சுங்கச்சாவடியை கடக்கும் போது பாஸ்டேக் இல்லாத காருக்கு இரு மடங்கு கட்டணத்தை கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், பாஸ்டேக் பொறுத்தப்பட்டிருந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவரின் காரில் , தங்களின் பாஸ்டேக் ரீடிங் மிஷின் வேலை செய்ய வில்லை என்று கூறி ரொக்கமாக பணத்தை கட்ட சொல்லி நிர்பந்தித்துள்ளனர். அதற்கு மறுத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் கார்களை சுங்கச்சாவடியை தாண்டி நிறுத்தி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் கார்களில் வந்த சட்டக்கல்லூரி மாணவர்களை சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறப்படுகின்றது.

இதனை பார்த்து இரு சக்கர வாகனங்களில் சென்ற சென்னை மாணவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கும் வகையில் ஆவேசமாகி உள்ளனர்

இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்களும் , உள்ளூர் வாசிகளும் சேர்ந்து சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்து விரட்ட தொடங்கி உள்ளனர்

சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்த கார்களை இரும்பு கம்பிகளை கொண்டு அடித்து நொறுக்கி , மாணவர்களை ஓடவிட்டனர்

தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டவர்கள் மட்டுமல்லாத அங்கு நின்ற தமிழக பதிவெண் கொண்ட அனைவரது வாகனங்களும் சேதப்படுத்த பட்டதோடு, தாக்குதலில் இருந்து தப்பி ஓடியவர்களை பிடித்து சாலையில் போட்டு மிருகத்தனமாக தாக்கினர்

இந்த தாக்குதல் சம்பவம் அனைத்தும் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த வடமலைபேட்டை போலீசாரின் முன்னிலையிலேயே நடந்தது

சில போலீசார் தடுக்க முயன்றும் தாக்குதலை கலவரக்காரர்கள் அடங்கவில்லை , சட்டக்கல்லூரி மாணவிகள் மீதும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ரவுடிகள் போல கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்

சுங்கச்சாவடியில் பணம் கட்ட மறுத்து சென்னை மாணவர்கள் தங்களை தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் சுங்கச்சாவடியில் பாஸ்டேக்கில் பணம் இருந்தும் கையில் பணம் கேட்டு தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆந்திரா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாகவும், செல்போன், தங்க சங்கிலிகள் பறிக்கப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவத்தை பொறுத்தவரை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆந்திர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments