அதிகபார லாரிகளுக்கு அபராதம்.. திடீர் உயர்வு வசூலுக்கு வலுசேர்க்கும்..! இனி இவர்களுக்கு ஜாலி தான்..!
சரக்குந்துக்கள் அதிக பாரம் ஏற்றிச்சென்றால் புதிய மோட்டார் வாகனச்சட்டப்படி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இருப்பது போக்குவரத்து போலீசார் கையூட்டு பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பார்ஸ்ட் லேன் - ஸ்லோ லேன் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் பல நேரங்களில் மற்ற வாகன ஓட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கூட தங்கள் வாகனங்களை இயக்க முடிவதில்லை...
சேலம் - உளுந்தூர் பேட்டை குச்சி நடப்பட்ட இருவழிச்சாலை.... அதிகாபாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள்... முந்திச்செல்ல வழியில்லாமல் மாப்பிள்ளை ஊர்வலம் போல சரக்குந்தின் வால்பிடித்துச்செல்லும் நிலை...!
60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்று சாலையோரம் வேக அளவு குறிக்கப்பட்டிருந்தாலும் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் 20 கிலோ மீட்டர் ஆமை வேகத்தில் மெதுவாக வாகனத்தை இயக்குவதால் கார்களில் செல்வோரும் அந்த சரக்குந்தின் பின்னால் மெதுவாக பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை நீடித்து வருகின்றது..
சென்னை மணலி எக்ஸ்பிரஸ் சாலை ... பெயரில் மட்டுமே எக்ஸ்பிரஸ் உள்ளது., மற்றபடி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கண்டெய்னர்களால் ரெஸ்ட் ஸ்லோ சாலையாக மாறி உள்ளது...
இவை அனைத்துமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகள்... அதிக பாரம் ஏற்றிச்செல்லும் 12 சக்கரங்கள் கொண்ட லாரிகளை தடுத்து நிறுத்தி கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள பாரத்திற்கு டன்னுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் அதிகாரம் இருந்தும் அதனை போக்குவரத்து காவல்துறையினரோ, மோட்டார் வாகன ஆய்வாளர்களோ வசூலிப்பது இல்லை, அவ்வளவு நல்லவர்களா ? என்று கேட்டு விடாதீர்கள்
அரசுக்கு செல்ல வேண்டிய அபராத தொகையை வசூலிக்காமல் இருப்பதற்கு, நான்கில் ஒரு பங்கை அதாவது டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் தங்கள் வங்கி கணக்கிற்கு கையூட்டாக பெற்றுக் கொண்டு அதிகபாரம் ஏற்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் லாரிகளை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையில் புதிய மோட்டார் வாகனச்சட்டப்படி அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயை அபராதக் கட்டணமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
ஏற்கனவே 5 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்று வளம் கொழிக்கும் அதிகாரிகள் இனி 10 ஆயிரம் ரூபாய் மிரட்டி பெறுவதற்கு இந்த அபராத உயர்வு வழி வகுக்கும் என்று லாரி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆரம்பத்தில் 12 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனம் 21 டன்கள் பாரம் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து தற்போது அதிகபட்சமாக 25 டன்னில் இருந்து 26 ஆயிரத்து 750 டன் சரக்குவரை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் இரு மடங்கு சரக்குடன் துறைமுகத்திற்கு கண்டெய்னர்கள் இயக்கப்படுவதாகவும் இதற்கு அதிக பட்சமாக 200 ரூபாய் கேஸ்லஸ் பண பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் , அந்த லாரி சர்வீஸ் நிறுவனத்தின் லாரிகளின் எண்ணிக்கையை பொறுத்து கணிசமான தொகையை மாதச்சம்பளமாக பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
முதலில் அபராதம் வசூலிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை ஒழுங்கு படுத்தாமல், அபராத தொகையை அதிகரிப்பது கையூட்டு தொகையை அதிகரிக்க உதவுமே தவிர போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த உதாவது என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையூட்டு பெறுவதில்லை என்றால் அதிகபாரம் ஏற்றிச்செல்லப்படும் வாகனங்கள் எப்படி சாலையில் அனுமதிக்கப்படுகின்றது? என்றும் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள், கிராமப்புற சாலைகளுக்குள் செல்லும் போது கனரகவாகனத்தின் எடையை தாங்கும் திறன் இல்லாமல் அந்த சாலைகள் சிதைந்து சின்னாபின்னமாகி குண்டும் குழியுமாகின்றது.
அபராதம் வசூலிக்கும் அதிகாரிகளின் ஒழுங்கின்மையால் பல பகுதிகளில் உள்ள சாலைகள் பல்லாங்குழி சாலைகளாக மாறி வருகின்றது என்று சுட்டிக்காட்டுகின்றனர்...
இப்படி சாலையில் பெரும் பள்ளத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் மீதும், அவற்றை தொடர்ந்து செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீதும், என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதற்கும் புதிதாக சட்டம் அமலானால் அதிக பாரம் வாகன் ஓட்டிகளுக்கு நீங்காத்துயரமாக மாறாது என்பதே கசப்பான உண்மை..!
Comments