சென்னையில் அதிமுக போராட்டம்.. இபிஎஸ் உள்ளிட்டோர் கைது.. சபாநாயகர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு..!
சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்குட்பட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வைக்கப்பட்டனர்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, காலம் காலமாக எதிர்க்கட்சியிலுள்ள அதிக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்படுபவரே எதிர்க்கட்சித் தலைவராகவும், துணைத் தலைவருமாக தேர்வு செய்யப்படுவதாக கூறினார்.
ஆனால் அந்த மரபையும், மாண்பையும் மீறி சபாநாயகர் அப்பாவு வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்பட்டு, தங்களது கோரிக்கையை நிராகரித்து விட்டதாக அவர் விமர்சித்தார்.
திமுகவை சேர்ந்த அதிக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டதாலேயே ஸ்டாலின் முதலமைச்சராக முடிந்தது என்றும், ஒருவேளை அக்கட்சியிலிருந்து 40 எம்எல்ஏக்கள் விலகும்பட்சத்தில், ஏற்கெனவே பதவியிலிருந்ததை வைத்து, முதல்வராக தொடர முடியுமா என்றும், அதுபோல்தான் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எப்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் நீடிக்க முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவிக்கு சட்டத்தில் இடமில்லை, அவையில் இடம்பெறவில்லை என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, பின்னர் அதிமுகவினர் வெளியேறிய பிறகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பேசுவார் என குறிப்பிட்டதாகவும், , இதிலிருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு தங்களுக்கு எதிராக செயல்பட்டிருப்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து சட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு இடமுள்ளது என்பதற்கான சட்ட ஆதாரத்தை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் வாசித்து காட்டினார்.
சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலையை சபாநாயகர் செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
அப்போது, செய்தியாளர் சந்திப்பை முடித்து கொள்ளும்படி போலீசார் தெரிவிக்கவே, எடப்பாடி பழனிசாமி எழுந்து அவர்களை கண்டித்தார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments