ஒரே நாடு - ஒரே உரம் திட்டம்... பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஒரே நாடு, ஒரே உரம் எனும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இன்று முதல், யூரியா அனைத்தும், பாரத் எனும் ஒரே பெயரில் விற்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 நாள் வேளாண் மாநாட்டையும், கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 600 விவசாய இடுபொருள் மையங்களையும் தொடங்கி வைத்து, வேளாண் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இதேபோல், பி.எம் பாரதிய ஜன் உர்வரக் ப்ரியோஜனா ஒரே நாடு - ஒரே உரம் எனும் புதிய திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், 12வது தவணையாக 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக கூறினார். ஒரே நாடு - ஒரே உரம் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு மலிவான விலையில் நல்ல தரமான உரம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் உரங்களின் தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விவசாய பயிர்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் கூறினார். மேலும் இன்று முதல் யூரியா அனைத்தும், பாரத் என்ற ஒரே பெயரில் விற்கப்படும் என்றார் அவர்.
நானோ யூரியாவை பயன்படுத்துவதன் மூலம், யூரியா உற்பத்தியில் தன்னிறைவு அடையும் லட்சியத்துடன் இந்தியா பணியாற்றி வருவதாகவும், இது இந்திய வேளாண் துறையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதுமுள்ள 3 லட்சத்து 15 ஆயிரம் உர விற்பனை கடைகளை பிரதம மந்திரி சம்ருதி கேந்திர மையங்களாக மாற்றும் பணி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சர்வதேச அளவில் விவசாய பொருள்கள் தயாரிப்பு மையமாக, இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்றும், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
Comments