மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு : 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

0 2408
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு : 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்து 85ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்படுவதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மேட்டூர் அணைக்கு இன்று காலை விநாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்தது. பின்னர் இந்த அளவு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது. சுரங்க மின் நிலையம் வழியே விநாடிக்கு 21ஆயிரத்து 500 கன அடி நீரும், 16 கண் மதகு வழியே விநாடிக்கு ஒரு லட்சத்து 63ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டது.

 

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே உள்ள சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

 

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டிருப்பதால், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 2-ஆவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையையொட்டி வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீரால், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 86 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதில் கொள்ளிடம் ஆற்றில் 63 ஆயிரம் கன அடியும் காவிரி ஆற்றில் 22,000 கன அடியும், வாய்க்காலில் ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கபடுவதால் ஆற்றின் உள்ளே திட்டு பகுதியில் அமைந்துள்ள நாதல்ப்படுகை,முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments