புதுச்சேரியில் போலி செல்போன் செயலி மூலம் ரூ.18 ஆயிரம் மோசடி செய்ய முயன்ற நபர் கைது..!
புதுச்சேரியில் செல்போன் கடையில், போலி செயலி மூலம் 18 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாக கூறி, செல்போன் அபேஸ் செய்ய முயன்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அண்ணாசாலையில் செல்போன் கடை ஒன்றில் நேற்றுகாலை, 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஒன்றை வாங்கிய இளைஞர் ஒருவர், இதற்கு அமேசான் ஆப் மூலம் பணம் அனுப்புவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்த நபர், பணம் செலுத்திவிட்டதாக கூறி, செல்போன் மெசேஜ் ஒன்றை காண்பித்துள்ளார். ஆனால், பணம் இன்னும் தனது வங்கிக்கணக்கிற்கு வரவில்லை என்று கூறிய கடைக்காரர், பணம் வந்ததும் மொபைலை தருவதாக கூறி, அந்த நபரை கடையிலேயே அமர வைத்துள்ளார்.
சுமார் 3 மணி நேரம் கழித்தும் பணம் வராததால், கடையில் இருந்து நழுவமுயன்ற அந்த நபரை, கடையில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபர் மயிலாடுதுறை மோழையூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பதும், போலி ஆப் மூலம் பணம் செலுத்தியது போல் காண்பித்து ஏமாற்ற முயற்சித்ததும் தெரியவந்தது.
Comments