ஐயா நான் தான் கொலைகாரன்: போலீசாரிடம் உண்மையை சொன்ன திருட்டு இளைஞர்

0 4835

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே திருட்டு வழக்கில் கைதாகி நீதிமன்றத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர்  கடந்த 20 நாட்களுக்கு முன்பு தாம் ஒருவரை கொலை செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களின் பேட்டரிகள் அடிக்கடி திருடு போவதாக வந்த புகாரை அடுத்து திருப்பாலைவனம் விஜி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்ற போது, கடந்த 20 நாட்களுக்கு முன்பு சின்ன ஓபலாபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை தமது நண்பருடன் சேர்ந்து கழுத்தறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

போலீசார் விஜியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர் விஜியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகையை சேர்ந்த லெவின் என்பவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஒடிசாவைச் சேர்ந்த அஜித் குமார் என்பவருடன் லெவினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சிறையில் இருந்து முன் ஜாமீனில் வந்த லெவின் மற்றும் அஜித்குமார் ஆகியோர் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் லெவினுக்கும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வட மாநில பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தன் காதலியை நண்பன் அஜித்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்த லெவின், காதலியை 2 நாட்களுக்கு வீட்டில் தங்க வைக்குமாறு அஜித்குமாரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக் கொண்ட அஜித்குமார் அந்த பெண்ணை தன் வீட்டில் தங்க வைத்தது மட்டுமின்றி நள்ளிரவில் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை காதலி மூலம் தெரிந்து கொண்ட லெவின் ஆத்திரம் அடைந்து தனது பழைய கூட்டாளியான திருப்பாலைவனத்தைச் சேர்ந்த விஜியை அழைத்து கொண்டு அஜித்குமாரை சந்தித்து, மது வாங்கி கொடுத்து கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பேட்டரி திருடிய வழக்கில் கைதான விஜியை கொலை வழக்கிலும் கைது செய்த போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட லெவின் மற்றும் அவரது காதலியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments