கேரளா: 12 பெண்கள் நரபலியா? போலீசார் விசாரணை தீவிரம்
கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கேரள போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையின் உச்சமாக கேரளாவில் இரு பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த சம்பவத்தில் போலி மந்திரவாதி முகம்மது ஷபி, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரையும், 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த ரோஸ்லின் என்ற பெண்ணையும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்து வந்து நிர்வாண பூஜை செய்ததுடன், நரபலி கொடுத்து 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளதாகவும், மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் வழக்கை விசாரித்து வரும் கொச்சி நகர காவல் ஆணையர் நாகராஜு தெரிவித்தார். அப்பெண்களின் உடல் பாகங்களை கைப்பற்றி போலீசார் டி.என்.ஏ.சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாக துப்புதுலங்கிய போலீசார், வழக்கில் முக்கியக் குற்றவாளியான முகமது ஷபி வக்கிரபுத்தி உடையவர் என்றும், அவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன என்றும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பகவல் சிங்கை போலி முகநூல் பக்கம் மூலம் நண்பராக்கி, செல்வம் பெருக பூஜை செய்வதாகக் கூறி ஷபி ஏமாற்றியுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கபெறலாம் என்று கூறும் போலீசார், பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாயமான மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Comments