நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.விலைவாசியைக் குறைக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 45 சதவீத அளவுக்கு முத்ரா கடன் தொகைகள் மகளிருக்கு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். முன்பு வெளிநாடுகளை சார்ந்திருந்த இந்தியா, இன்று டிஜிட்டல், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் புதிய எல்லையைத் தொட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த அரசு நிர்வாகம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவின் 5 ஜி சேவை தனித்துவமானது என்று கூறிய அவர், மற்ற நாடுகளுக்கும் இந்தியா தனது 5 ஜி சேவையை வழங்கத் தயார் என உறுதி அளித்தார்.
முன்னதாக சர்வதேச நாணயம் நிதியம் மற்றும் உலகவங்கி ஆண்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய நிர்மலா சீதாராமன், உலகளாவிய பொருளாதார மந்த நிலை மற்றும் வட்டி விகிதங்கள் குறைப்புகளுக்கு மத்தியில், 7 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் பற்றி இப்போதே எதுவும் கூற முடியாது என்றும் அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதுடன், விலைவாசியை கட்டுப்படுத்தும்வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Comments