ரூ.7.5 கோடி லஞ்சத்துக்காக அக்மார்க் ஏழரையில் சிக்கிய டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்..!
விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் மீது வழக்கு பதிவதற்கு அவரது சகோதரர் சுந்தரேசனிடம், 75 கோடி ரூபாய் சொத்துமதிப்பில் 10 சதவீதமான, 7 1/2 கோடி ரூபாயை லஞ்சமாக கேட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கும், அவரது சகோதரர் ஜெகதீசனுக்கும் தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அடுத்த அகரம் மற்றும் சேவைக்காரன் மடம் பகுதிகளில் உள்ள நிருவனங்களில் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதையடுத்து வைகுண்டராஜனுக்கு எதிராக ஜெகதீசனின் மகன் செந்தில்ராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதம் 21 ந்தேதி ஆன் லைன் மூலம் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரில் வழக்கு பதிவு செய்வதற்கு அப்போதைய ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் என்பவரும், ஏரல் மற்றும் சாயர்புரம் காவல் ஆய்வாளராக இருந்த பட்டாணியும் ஜெகதீசன் மற்றும் செந்தில்ராஜனை நேரடியாக சந்தித்துள்ளனர்.
அவரிடம் சொத்து பாகபிரிவினை மூலம் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உங்கள் கைக்கு வந்துள்ளதால் அதில் 10 சதவீதமான 7 1/2 கோடி ரூபாயை தங்களுக்கு லஞ்சமாக கொடுத்தால் வைகுண்டராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று பேரம் பேசியதாக கூறப்படுகின்றது.
இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக கொடுக்க ஜெகதீசன் மறுத்த நிலையில் வைகுண்ட ராஜனின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் செந்தில்ராஜனிடம் பணிபுரியும் மாரியப்பன் என்பவர் மீது ஏரல் காவல் ஆய்வாளர் பட்டாணி வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.
அதே போல 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வைகுண்டராஜன் ஆதரவாளரான புலிகேசி என்பவர் மீது ஏரல் காவல் நிலையத்தில் திருட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மீதும் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் பட்டாணி ஆகிய இருவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து ஜெகதீசன், செந்தில்ராஜன் தரப்பில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புகார்தாரருக்கு புகார் ஏற்பு சான்றிதழ் கூட வழங்காமல் இருந்தது மூலம் இரு காவல் அதிகாரிகளும் லஞ்சப்பணத்துக்காக அரசு பணியை செய்யாமல் மெத்தனமாக நடந்து கொண்டது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாவதாக தெரிவித்த நீதிமன்றம், டி.எஸ்.பி சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் பட்டாணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன் படி தற்போது தூத்துக்குடி மாவட்ட குற்றபிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றிவரும் சுரேஷ்குமார், நாசரேத் காவல் ஆய்வாளர் பட்டாணி ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பீட்டர் பால் துரை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
Comments