கத்தி எடுத்த கபாலிகள் வழுக்கி விழுந்ததால் தூக்கி வந்து மாவு கட்டு..

0 6030

சென்னை ஆலந்தூரில் பொதுமக்களை வெட்டியும், வாகனங்களை அடித்தும் நொறுக்கிய ரவுடி கும்பலை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் இருந்து தப்பியோடி வழுக்கி விழுந்தவர்களுக்கு கை-கால் உடைந்த நிலையில் அவர்களை குழந்தை போல தூக்கி வந்து போலீசார் மாவு கட்டு போட்டு விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆலந்தூர் ஆபிரகாம் நகரில் சம்பவத்தன்று இரவு ஒரு கும்பல் பட்டாக்கத்தி, கிரிக்கெட் மட்டைகளுடன்  வன்முறையில் ஈடுபட்டது. 

5-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல், அவ்வழியே சென்ற நவீன், அபூபக்கர், சபிக் ஆகியோரை சரமாரியாக வெட்டியது. மேலும் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி சமாதி ஒன்றில் வீசி சென்றது

சம்பவ இடத்திற்கு வந்த மவுண்ட் ரோந்து போலீசார், அக்கும்பலை விரட்டி பிடிக்க முயன்ற போது போலீசார் மீதும் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியுள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஏரியாவில் யார் பெரிய ரவுடி என்பது தொடர்பாகவும், கஞ்சா விற்பனை தொடர்பாகவும் நிலவிய முன்விரோதத்தில் நாகூர் மீரான் என்ற ரவுடியை இன்னொரு ரவுடியான ராபின் என்பவரின் தரப்பு கடந்தாண்டு வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகின்றது 

ஜாமீனில் வந்த ராபீன் தலைமறைவான நிலையில், ராபினின் தங்கை ஷெரினின் காதலன் அரவிந்தை கடத்திச்சென்று நாகூர் மீரான் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

இதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக, ராபீன் ஆதரவாளர்கள் கூட்டாக சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து ராபீனின் கூட்டாளிகளான துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அருள்ராஜ், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நவீன்குமார், மணிகண்டன், சஞ்சய், கவுதம் உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்ய சென்றபோது தப்பியோடியதில் வழுக்கி விழுந்ததில் சிலருக்கு கை, கால்கள் உடைந்துள்ளது. அவர்களை குழந்தைகளை போல தூக்கிச்சென்று மருத்துவமனையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

ராபினின் தங்கையின் காதலன் அரவிந்தை கடத்திய வழக்கில் ஆலந்தூரை சேர்ந்த வீரா உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments