இந்தியாவின் வளர்ச்சியால் மனிதகுலத்துக்கு பலன்.. உஜ்ஜைனில் மோடி பெருமிதம்!
இந்தியா தனது பெருமையையும் வளத்தையும் மீட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உலகமே பலன் அடையும் என்றும் உஜ்ஜைனில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது குறிப்பிட்டார்.
12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் உள்ள மகாகாளேஸ்வர் கோயிலை மேம்படுத்தும் பணி 856 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 316 கோடி ரூபாய் செலவிலான முதற்கட்ட சீரமைப்புப் பணிகள் முடிந்ததுள்ள நிலையில், புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அங்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா தனது வளமை மற்றும் பெருமையை மீட்டு வருவதாகவும், இதன் பலன் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே கிடைக்கும் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தியா தனது ஆன்மீக பலத்தால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் அழியாத புகழ் பெற்றுள்ளதாக மோடி கூறினார்.
ஒரு நாடு முன்னேற்றம் காண அதன் பண்பாட்டு அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அது புதிய உச்சத்தைத் தொட வேண்டும் என்றும் மோடி தமது பேச்சில் குறிப்பிட்டார். இந்தியாவின் தத்துவார்த்த நிலை மீண்டும் உலகை வழிநடத்திச் செல்லும் இடத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது பாரம்பரிய மதிப்பீடுகளுடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, இறை நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ச்சியை நோக்கியும் நாடு முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, மகாகாளேஸ்வர் கோவிலில் ஆரத்தி மற்றும் வழிபாட்டில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். பாலிவுட் பாடகர் கைலாஷ் கெர் உள்ளிட்டோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் அமர்ந்து ரசித்தார். பிரதமர் வருகையையொட்டி, பொதுமக்களைக் கவரும் வகையில் கோவிலில் ஒலி ஒளி காட்சி அமைக்கப்பட்டிருந்தது
Comments