பெண் லாட்டரி வியாபாரிகளை பலியிட்டால் செல்வம் கொழிக்குமா..? என்னடா புது புரளியா இருக்கு..!
முகநூல் நண்பரை பார்க்கச்சென்ற இரு பெண் லாட்டரி வியாபாரிகள் மந்திரவாதியால் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்வம் கொழிக்கும் நரபலிக்காக முகநூலில் ஆள் பிடித்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
தர்மபுரியை சேர்ந்த 52 வயதான பத்மா என்ற பெண் கேரள மாநிலம், எர்ணாகுளம் அடுத்த கடவந்திராவில் தங்கி லாட்டரி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26 ந்தேதி இவர் மாயமானதால் கொச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் திருசூர் கடற்கரை காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் என்ற 50 வயது லாட்டரி வியாபாரியும் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அடுத்தடுத்து இரு லாட்டரி வியாபாரிகள் மாயமானதால், இருவரது செல்போன் தொடர்புகளை வைத்து கொச்சினை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி என்பவனை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
திருவல்லாவை சேர்ந்த வைத்தியர் பகவந்த்சிங், லைலா தம்பதிகளிடம் குடும்ப நன்மைக்காக ஐஸ்வர்ய பூஜை செய்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று நம்ப வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்ற முகமது ஷபி, அதிர்ஷ்டமான லாட்டரிச் சீட்டுக்களை விற்கும் இரு பெண்களை நரபலியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
அதன்படி பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகிய இரு லாட்டரி வியாபாரிகளிடமும் முக நூல் மூலம் பழகிய முகமது ஷபி , தான் சினிமா தயாரிப்பதாகவும், அதில் நடிக்க சம்பளமாக 10 லட்சம் ரூபாய் தருகிறேன் , நேரில் வாருங்கள் என ஆசைவார்த்தைக்கூறி அழைத்துச் சென்றுள்ளான்.
ஐஸ்வர்ய பூஜை செய்கிறேன் என்று இந்த இரண்டு பெண்களையும் கட்டிலில் கட்டிப்போட்ட முகமது ஷபி, அந்தப்பெண்களின் உடலில் கத்தியால் குத்தி கிழித்து ரத்தத்தை பிடித்து செல்வம் செழிக்கும் என்று வீடு முழுவதும் தெளித்துள்ளான்.
இரு பெண்களையும் நரபலி கொடுத்த பின்னர், அவர்களது உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி திருவல்லா அருகே புதைத்துள்ளதாகவும் முகமது ஷபி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொடூர நரபலி சம்பவம் தொடர்பாக மந்திரவாதி முகமது ஷபி, பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, கூட்டாளி சிகாப் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முக நூலில் நட்பாக பழகும் ஆசாமிகளின் ஆசைவார்த்தையை நம்பிச்சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த கொடூர நரபலி சம்பவம் சாட்சியாக மாறி இருக்கும் நிலையில் உழைப்பை நம்பாமல் அதிஷ்டத்தை நம்பிய பகவந்த்சிங் - லைலா தம்பதி கொலை வழக்கில் சிக்கி ஜெயிலில் கம்பி எண்ணி வருகின்றனர்.
Comments