எம்.ஆர்.பியை விட கூடுதல் விலை - ரிலையன்ஸ் டிரண்ட்ஸுக்கு ரூ.2.05 லட்சம் அபராதம்..!
சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஜவுளிக்கடைக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஜவுளிக்கடையில், 2013 ஆம் ஆண்டு ஓசூரை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் 278 ரூபாய்க்கு உள்ளாடை ஒன்றை வாங்கியுள்ளார். அதன் எம்.ஆர்.பி. விலையை விட 18 ரூபாய் அதிகமாக பில் போடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வாடிக்கையாளர் சிவப்பிரகாசம் கடிதம் அனுப்பியதில்,ஊழியரின் தவறால் நேர்ந்து விட்டது என்று கூறி, 18 ரூபாய்க்கு வரைவோலையை ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ் நிறுவனம் அனுப்பியது. இதனை ஏற்க மறுத்து அவர், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம், ரிலையன்ஸ் ட்ரண்ட்ஸ் நிறுவனம் இதுபோன்று பல வாடிக்கையாளர்களுக்கு சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை செய்துள்ளதாக சுட்டியதோடு, தமிழ்நாடு நுகர்வோர் நலநிதி நிதி கணக்கில் 2 லட்சம் ரூபாயை இழப்பீடாக செலுத்தவும், பாதிக்கப்பட்ட சிவப்பிரகாசத்திற்கு 5000 ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.
Comments