இந்தி சூப்பர் ஸ்டாருக்கு இன்று 80 வயது - Happy Birthday அமிதாப் பச்சன்..!
இந்தி திரையுலகின் மூடிசூடா மன்னனாக சுமார் 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் அமிதாப்பச்சன் தனது 80வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தித் திரைப்படம் என்றதும், நமது நினைவுக்கு முதலில் வருவது அமிதாப்பச்சன்தான். கதாநாயகராக மட்டுமன்றி, காலம் உணர்ந்து குணச்சித்திர நடிகராகவும், அபாரமான நடிப்பை அமிதாப்பச்சன் வெளிப்படுத்தி வருவதால், ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் என பலர் வந்த பின்னரும், அமிதாப்பின் இடத்தை அசைக்க முடியவில்லை.
அலகாபாத்தில் 1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி பிறந்த அமிதாபச்சன், 1969ம் ஆண்டு வெளியான சாட் ஹிந்துஸ்தானி என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
அறிமுக படத்திலேயே அபாரமான நடிப்பால், சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இதையடுத்து ராஜேஸ் கண்ணாவுடன் இணைந்து நடித்த ஆனந்த் படத்திற்கு, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
தீவார், ஷோலே, அமர் அக்பர் அந்தோணி, டான் என வரிசையாக அவர் நடித்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. இதனால் சாதாரண நடிகராக இருந்த அமிதாப்பச்சன், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
வயதுக்கும் - நடிப்புக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சர்க்கார் படத்தில் அமிதாப்பச்சன் வெளிப்படுத்திய மிரட்டலான நடிப்பு, உண்மையான மும்பை தாதாக்களை, கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சனின் நடிப்பை பாராட்டி, திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அளித்து, மத்திய அரசு கவுரவித்தது. பத்ம விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
நடிப்பு போதாது என்று அரசியலிலும் தடம் பதித்த அமிதாப் பச்சன், 1984ம் ஆண்டு அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஆனால் போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்பட்டதால், 1987ம் ஆண்டு பதவி விலகினார்.
பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படும் அமிதாப்பச்சன், இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுவதால், பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட் பதிவில், தலைமுறை கடந்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியவர் அமிதாப்பச்சன் என்றும், இந்தியாவில் உள்ள திரைப்பட நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் என்றும், அவர் நீண்டகாலம், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், வாழும் லெஜன்ட்டும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமுமான அமிதாப்பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Comments