உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணைவீச்சு.. உலக நாடுகள் கண்டனம்

0 3555

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஐராப்பாவின் மிக நீளமான பாலம் இரு தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், அதனை உக்ரைன் மறுத்தது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று அடுத்தடுத்து 5 இடங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் கீவில் உள்ள 11 முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான பெலாரஸ் மற்றும் கிரீமியாவிலிருந்து 84 குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் குண்டு மழையில், கீவ்விலுள்ள ஏராளமான கட்டிடங்கள், வாகனங்கள் தீக்கிரையான நிலையில், எங்கு பார்த்தாலும் தீப்பிழம்பாக காட்சியளித்தது.

தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானதாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார். தாக்குதலுக்கு ஈரானின் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என இம்மானுவேல் மேக்ரன் குற்றம் சாட்டினார்.

பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமாது எனவும், போர்க்குற்றம் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித்தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களுடன் புடின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகள் அதிகமாகும் பட்சத்தில், ரஷ்யாவின் பதில் கடுமையாக இருக்கும் என புடின் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments