சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

0 2753

சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார்.

82 வயதான முலாயம் சிங், கடந்த வாரம் முதல் குருகிராம் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். சமாஜ்வாதி கட்சி தலைவரான முலாயம் சிங், மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர். முலாயம்சிங் காலமான தகவலை, ட்விட்டரில் அவருடைய மகனும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், உத்தரபிரதேச மற்றும் தேசிய அரசியலில் முலாயம் சிங் மிகவும் முக்கிய பங்காற்றியதாகவும், நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயகத்தை காக்கும் வீரராக திகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சராக வலுவான இந்தியாவை உருவாக்க, முலாயம் சிங் பணியாற்றியவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள ட்விட் பதிவில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க முக்கிய பங்காற்றியவர் முலாயம் சிங் என்று தெரிவித்துள்ளார். அவர், மதச்சார்பற்ற சிந்தாந்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்றும், மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு அஞ்சலி செலுத்துவார் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முலாயம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,
3 நாள் அரசுமுறை துக்கம் கடைபிடிக்கப்படுமென அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், உத்தரபிரதேச முதலமைச்சராகவும் முலாயம் சிங் ஆற்றிய பங்களிப்பை, எப்போதும் மறக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments