வண்ணமயமான பிலிம்பேர் விருது: சூரரைப் போற்று படத்துக்கு 8 விருதுகள்
தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடத் திரைப்படங்களுக்கான பார்லே பிலிம்பேர் விருதுகள் பெங்களூரில் நடைபெற்ற வண்ணமயமான நட்சத்திர விழாவில் வழங்கப்பட்டன. ஜெய்பீம் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டது. சூரரைப் போற்று 8 விருதுகளை அள்ளிச்சென்றது.
தென்னிந்திய திரைப்படங்களுக்கான 67 வது பார்லே -பிலிம்பேர் விருதுகள் நேற்று பெங்களூரில் அளிக்கப்பட்டன. சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகர்கள் சூர்யா-ஜோதிகா, மாதவன், சாய் பல்லவி, பூஜா ஹெக்டே அபர்ணா பாலமுரளி கீர்ததி ஷெட்டி, சுமலதா, தபூ உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்
தமிழின் சிறந்த படமாக சூர்யா நடித்த ஜெய்பீம் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது .இப்படத்தின் நாயகி லிஜிமோல் ஜோஸ் சிறந்த நடிகையாக விருது பெற்றார்.
சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார் .சுதா கொங்குரா சிறந்த இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டார். அதே படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றார்.இப்படத்தில் காட்டுப்பயலே பாடலைப் பாடிய DHEE சிறந்த பாடகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது வழங்கப்பட்டது.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த பசுபதிக்கும் ஊர்வசிக்கும் சிறந்த குணச்சித்திர நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
தெலுங்கில் புஷ்பாவும் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் படங்கள் சிறந்த படங்களாக விருது பெற்றன. அல்லு அர்ஜூன் சிறந்த தெலுங்கு நடிகராகவும் சாய் பல்லவி சிறந்த தெலுங்கு நடிகையாகவும் பிலிம்பேர் விருது பெற்றனர்.
விழாவில் சீதாராமம், புஷ்பா படங்களின் பாடல்களுக்கு நடனமாடிய நடிகை மிருணாள் தாக்கூருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
Comments