2வது முறையாக திமுக தலைவரானார் மு.க. ஸ்டாலின்..
திமுக தலைவராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி கனிமொழி எம்பி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.
தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தவிர, வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் உருவ படங்களுக்கு, மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.
தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகம்மது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தலைமை நிலைய முதன்மை செயலாளராக கே.என். நேருவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்தார். பின்னர் கட்சியின் துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்பி ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன்,டி.ஆர். பாலு ஆகியோருக்கு, கட்சி மூத்த தலைவர்கள் பிரமாண்ட ரோஜாமாலைகள் அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், திமுகவினர் சிலர் பொது இடங்களில் நடந்து கொண்ட முறையின் காரணமாக கட்சி பழிக்கும், ஏளனத்துக்கும் ஆளானதாகவும், ஆதலால் கட்சியினர் மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தி எச்சரிக்கையாக பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Comments