இந்திய விமானப்படையில் புதிய படைப்பிரிவுக்கு ஒப்புதல்.. புதிய உடை அறிமுகம்

0 3497

இந்திய விமானப்படையில் டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கையாள முதல்முறையாக தனிப்பிரிவு ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் விமானப்படை வீரர்களுக்கு புதிய உடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலேய காலனியாதிக்கத்தின்போது, பிரிட்டனின் ராயல் ஏர்போர்ஸ் விமானப்படைக்கு உறுதுணையாக, கடந்த 1932ம் ஆண்டு இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இந்த தினம், இந்திய விமானப்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

90ம் ஆண்டு விமானப்படை கொண்டாட்ட நிகழ்ச்சியையொட்டி சண்டிகரில் நடைபெற்ற விமானப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பில் பங்கேற்று, விமானப்படை தளபதி V R Chaudhari மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய வி.ஆர்.செளத்ரி, இந்திய விமானப்படையில் டிரோன்கள், ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை கையாளும் அதிகாரிகளுக்காக புதிய ஆயுத அமைப்பு பிரிவை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் தந்து இருப்பதாகவும், நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு இதுபோல தனிப்பிரிவு உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார். இதனால் 3,400 கோடி ரூபாய்க்கும் மேல் மிச்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்திய விமானப்படையின் வல்லமையை வெளிபடுத்தும் வகையில், விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இலகுரக விமானம் தேஜாஸ், சுகோய், மிக் -29, ஜாக்குவார், ரபேல், சி-130ஜே, ஹாக், ஐஎல் 76, மிராஜ் 2000 மற்றும் C-17 விமானங்கள் அணிவகுத்து வந்தன.

இதேபோல் இலகுரக ஹெலிகாப்டரான பிரசாந்த், துருவ், சினுகுக், அபாச்சி, Mi-17 ஹெலிகாப்டர்களும் அணிவகுத்து வந்தன. மேலும் ஆகாஸ் கங்கா அணி பிரிவை சேர்ந்த பாரா ட்ரூப் வீரர்களும் AN-32 விமானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்தனர்.

குடியரசுத் தலைவர் திரபுபதி முர்மு, விமானப்படை தளபதி சவுதரி உள்ளிட்டோர் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசத்தை நேரில் பார்வையிட்டனர்.

டெல்லி - தேசிய தலைநகர பிராந்தியத்தில் மட்டுமே விமானப்படை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் முதல்முறையாக அப்பகுதிக்கு வெளியே, தற்போதுதான் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் விமானப்படை வீரர்களுக்கான புதிய ஆடையும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments