இந்தியாவுக்கு தனி டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகம் - ரிசர்வ் வங்கி
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி கொள்கைக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிப்டோ கரன்சி விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இந்தியாவுக்கு தனி டிஜிட்டல் கரன்சி குறித்து ரிசர்வ் வங்கி கொள்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட தேவைகள், பரிவர்த்தனைகளுக்காக டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை முறையில் இந்த டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, தற்போதைய ரொக்கப் பணத்துக்கு மாற்றாக இதைக் கொண்டு வரவில்லை என்றும் இரண்டு வடிவிலான கரன்சிகளும் நீடிக்கும் என்றும் விளக்கம்அளித்துள்ளது.
பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆக்கப்பூர்வமான வர்த்தகம், சட்டவிரோதமான பணப்பரிமாற்றத்தைத் தடுத்தல் ஆகியவை இந்த டிஜிட்டல் கரன்சியின் முக்கிய இலக்காகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் பயன்படுத்தும் வகையில் சில்லரை டிஜிட்டல் கரன்சி, குறிப்பிட்ட நிதி அமைப்புகளின் பயன்பாட்டிற்காக மொத்தவிலை டிஜிட்டல் கரன்சி என்று இரண்டு வகையாக கரன்சிகள் வெளியிடப்படும் என்றும், இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
காகித நாணயத்தின் பயன்பாடு குறைந்து வருவதால், உலக அளவில் மத்திய வங்கிகள் இப்போது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு வடிவ நாணயத்தை பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
Comments