3 சிறுவர்களின் உயிரை பறித்த கெட்டுப்போன ரசம் சாதம்
திருப்பூரில் விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்து விட்ட நிலையில், 11 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில், விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியுள்ள இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு காப்பகத்தில் ரசம் சாதம் சாப்பிட்ட சிறுவர்களுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் 14 சிறுவர்கள் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 2 சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட, ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். மேலும் 11 சிறுவர்களுக்கு நீர்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்தார்.
சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கூறு ஆய்வுக்கு பிறகு தான் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருப்பூர் வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி தலைமையில் 2 குழுக்களும், காவல் துறை சார்பில் மாநகர காவல் துணை ஆணையர் அபிநவ் குமார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விவேகானந்தா சேவாலயத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் 11 சிறுவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments