அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்..!
ஒவ்வொரு தேர்தலின்போதும், இலவசங்களை அளிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், விரிவான விசாரணை தேவை எனக் கூறி 3 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது எப்படி என்பது குறித்த விவரங்களை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய தகவல்களை அளிக்காதிருத்தல், வாக்குறுதிகளால் நிதி நிலைத்தன்மையின் மீது ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் அதற்கான திட்டங்களை நிதி நிலை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகள் வரும் 19ம் தேதிக்குள் தங்களது தரப்பு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திர சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
Comments