வித்யாரம்பம் நிகழ்ச்சி : மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு அரசு தொடக்கப் பள்ளிகளை திறந்து வைக்க தமிழக அரசு உத்தரவு..!
விஜயதசமியையொட்டி இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வசதியாக, அரசு தொடக்கப் பள்ளிகளை இன்று திறந்துவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் நாளை, வீடுகளில் புனிதமாகக் கொண்டாடும் நாள்தான் விஜயதசமி.
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள். மழலைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். ஏற்கனவே கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் குருதட்சணை அளித்து அக்கலையை பயிலுவார்கள்.
மங்களகரமான விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை அல்லது ஓம் என்ற எழுத்தை எழுத வைப்பார்கள்.
இதன் பிறகு, தங்க மோதிரத்தை கொண்டு குழந்தையின் நாவில் எழுதுவார்கள். குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற முறையில் மகிழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.
விஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
Comments