நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகு விமரிசை..!
நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில், கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவியை வழிபடும் விதமாக சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை வைத்து பூஜை செய்வர். வீடுகளிலும் கல்வி உபகரணங்களை வைத்து வழிபடுவர்.
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காலை முதலே கோவில்களில் திரண்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி, திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலில் குவிந்த மக்கள் நோட்டு, பேனா, வெண்தாமரை மலர்கள் உள்ளிட்டவற்றை வைத்து வழிபட்டுச் சென்றனர்.
தூத்துக்குடியில் சிதம்பர விநாயகர் ஆலயத்தில் உள்ள கலைமகள் சன்னதியில் சரஸ்வதி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதே போல, நெல்லை டவுன் கீழரத வீதியில் உள்ள விஜய சரஸ்வதி அம்மன் கோவிலில் காலையில், வித்யா ஹோமமும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.
ஆயுத பூஜையை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொழிலாளர்கள் பேருந்துகளை சீரமைக்க பயன்படுத்தும் தொழில் கருவிகளை அடுக்கி வைத்து அதற்கு சூடம் ஏற்றி வழிபட்டனர்.
இதே போல, சேலம் மாவட்டத்தில் நகை செய்யும் தொழிலாளர்கள், நகை செய்ய பயன்படுத்தும் ஆயுதங்களை வைத்து அதற்கு பூஜை செய்தனர்.
மக்கள் தங்களது வீடுகளிலில் உள்ள வாகனங்களுக்கு பூஜை செய்து ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
Comments