8 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப்பின் பிரியா விடை கொடுத்த மங்கள்யான்.. வெற்றிப்பயணம் நிறைவு..!
செவ்வாய கிரகத்தை ஆராயும் நடவடிக்கைகளில் இறங்கிய இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மங்கள்யான் விண்கலத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பரில் விண்ணுக்கு அனுப்பியது.
சுமார் 10 மாத கால பயணத்திற்குப்பின், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில், மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்தது.
அமெரிக்கா, ரஷ்ய நாடுகளும், ஐரோப்பியன் யூனியனும் பல கட்ட முயற்சிகளுக்குப்பின்னரே, செவ்வாய் சுற்றுவட்டபாதையில் விண்கலத்தை செலுத்திய நிலையில், முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நுழைந்தது.
மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த 5 முக்கிய உபகரணங்கள் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன.
அதிநவீன கேமிரா, செவ்வாய் கிரத்தின் பல்வேறு முப்பரிமாண படங்களை எடுத்து அனுப்பியதால், அந்த கிரகத்தின் நில அமைப்பு, மேற்பரப்பு குறித்த அரிய தகவல்கள் கிடைத்தன.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை மங்கள்யான் அனுப்பியுள்ள நிலையில், செவ்வாயின் வெப்பநிலை, வளிமண்டல வாயுக்கள் குறித்தும் அரிய தகவல்கள் திரட்டப்பட்டன.
செவ்வாயில் CH 4 எனும் மீத்தேன் வாயு இருக்கிறதா? எனவும் மங்கள்யான் ஆய்வு செய்தது.
சுமார் 8 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கள்யான் விண்கலம், தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பேட்டரி சேமிப்பு பிரச்னைகளில் சிக்கியதால், பூமியுடனான தொடர்பை இழந்துவிட்டதாக, இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மங்கள்யான் விண்கலம் 6 மாதங்களுக்கு மட்டுமே ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் சுமார் 8 ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Comments