மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் சிக்கிய 6 பேர் பலியான சோகம்.. கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர்..!
தூத்துக்குடியில் இருந்து தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்திற்கு வழிப்பாடு செய்ய வந்த 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணல் கொள்ளையர்களால் நிகழ்ந்த உயிர்பலி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டியை சேர்ந்த 40 பேர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா தேவாலயத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு காலையில் திருக்காட்டுப்பள்ளி அடுத்த குடிமகன் கிராமத்தில் உள்ள செங்கரையூர் பாலம் பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக பேருந்தை நிறுத்தி உள்ளனர். குடிமகன் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குறைந்த பட்சம் கணுக்கால் தொடங்கி அதிகபட்சமாக இடுப்பளவு மட்டுமே தண்ணீர் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இறங்கி குளிப்பது வழக்கம் என்பதால் தூத்துக்குடியை சேர்ந்த 40 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.
ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பாக மாட்டுவண்டி மற்றும் திருட்டு மணல் அள்ளிய கும்பலின் கைவரிசையால் சில இடங்கள் 10 அடிக்கும் ஆழமான பகுதிகளாக மாறி இருப்பதை சுற்றுலாபயணிகள் அறிந்திருக்கவில்லை. இந்த ஆழமாக பகுதியில் ஒருவர் நீரில் மூழ்க அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர்.
இதனை பார்த்த மற்றவர்கள் கத்தி கூச்சலிட்டதால், உள்ளூர் வாசிகள் மற்றும் விரைந்து சென்று மற்றவர்கள் ஆழமான பகுதிக்குள் செல்லாமல் தடுத்து கரையேற்றினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி தேடியதில் 2 பேர் சடலாமக மீட்கப்பட்டனர், நான்கு பேரை தேடும் பணி நடந்து வருகின்றது.
தூத்துக்குடி சிலுவைபட்டி கோவில் தெருவை சேர்ந்த சார்லஸ் , பிருத்திவிராஜ் , ஆகிய இருவரது சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் நீரில் மூழ்கிய தாவீது, ஹெர்மெஸ், ஈசாக், பிரவீன்ராஜ், ஆகிய நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. திருட்டு மணல் அள்ளிய இடங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் படகு கொண்டு தேடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுற்றுலாபயணிகள் குளிக்கின்ற பகுதியில் மணல் கொள்ளையர்கள் பறித்து வைத்த குழிகளில் சிக்கி 6 உயிர்கள் பறிபோயுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ள நிலையில் தேவாலயத்திற்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியாகி இருப்பது சிலுவைப்பட்டி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Comments