5ஜி சேவையை தொடங்கி வைத்த பிரதமர்.. வரலாற்று சிறப்புமிக்க நாள் என பெருமிதம்..!
அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5ஜி சேவையை நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் மோடி, 5ஜி தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதால், இந்தியாவிற்கு இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 4 நாள் இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு 5ஜி சேவை தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார். இதனை அடுத்து, அதிவேக 5ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஜியோ அரங்கில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி பிரதமருக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் செயல்பாட்டினை விளக்கினார்.
இதேபோல் பல்வேறு அரங்குகளில் 5 ஜி செயல்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த சாதனங்களை பிரதமர் பார்வையிட்டார். மெய்நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், டெல்லியில் இருந்தே ஸ்வீடனில் உள்ள காரை ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன் பிரதமர் இயக்கிப்பார்த்தார்.
தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையை விட பல மடங்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் 5ஜி, பின்னடைவு இல்லாத இணைய சேவை, பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.
இயந்திரங்களுக்கு இடையிலான தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை உள்ளடக்கிய சேவையை 5ஜி அளிக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு தற்சார்பு இந்தியா திட்டத்தை அறிவித்தபோது பலரும் நகைத்த நிலையில், தற்போது அவை நிறைவேற்றப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டில் ஒரு ஜி.பி. டேட்டா 300 ரூபாய் அளவிற்கு இருந்த நிலையில், தற்போது 10 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், 5ஜி சேவை மூலம் காணொலி வாயிலாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களும் 5ஜி சேவையின் மூலம் பயனடைய உள்ளதாக கூறினார்.
இதனிடையே, அடுத்த 6 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் 5ஜி சேவையை பெறும் என்றும், 2 ஆண்டுகளில் நாட்டில் 90% பகுதிகளில் 5ஜி சேவை மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் தெரிவித்தார்.
Comments