நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று!

0 3477

இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்த நாள்.... வசன உச்சரிப்பாலும், முகபாவனையாலும் ஈடுஇணையற்ற நடிகராகத் திகழ்ந்து, உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்டவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.

1952 ல் அறிமுகமான முதல் திரைப்படமான பராசக்தியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வசனங்களுக்கு தன்னுடைய சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.!

பீம்சிங், பி.ஆர்.பந்துலு. ஏபி நாகராஜன் என்ற மும்மூர்த்திகளின் இயக்கத்தில் வெளியான படங்கள் மூலம் சிவாஜியின் திரைப்பயணம் மெருகேறியது. டைரக்டர் பதிபக்தி, பாவமன்னிப்பு பாசமலர், பாலும் பழமும், படித்தால் மட்டும்போதுமா, பார்த்தால் பசி தீரும் என ப-வரிசை படங்களாய் எடுத்து வெற்றியாய் குவித்தார் பீம்சிங்.

அபார ஞாபகசக்தியால் மிக நீண்ட வசனங்களையும் ஒரே மூச்சில் பேசும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்தார் சிவாஜி... திருவிளையாடல், கந்தன்கருணை போன்ற புராணப் படங்களில் நடிகர் திலகம் தந்த நடிப்பை இன்றளவும் எவரும் மிஞ்சிவிடவில்லை

சம்பூர்ண ராமாயணம், கர்ணன் போன்ற இதிகாசப் படங்களிலும் தன்னை அந்த கதாபாத்திரமாகவே நிலை நிறுத்திக்கொண்டவர் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்

தேசபக்தியிலும் பகுத்தறிவு கருத்துகளிலும் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் வேறு எந்த நடிகரும் தொடாத உயரங்களைத் தொட்டன. கட்டபொம்மன் , வ.உ.சி, பகத்சிங், கொடிகாத்தகுமரன், பாரதியார் என அனைவரையும் தன்னுடைய நடிப்பால் மக்கள் மனதில் விதைத்தவர் அவர்.

ஏழை, பணக்காரன், பக்தன், குடிகாரன், பித்தன், பேரறிவாளன், மன்னன், விடுதலை வீரன் என இவர் ஏற்காத பாத்திரங்களே இல்லை. எத்தனை வேடமேற்றாலும், எந்த வயது வேடமானாலும், அத்தனை வேடங்களிலும் மாறுபட்ட நடிப்பை கொடுப்பதில் என்றுமே சிவாஜி மட்டுமே முன்னோடி. உணர்ச்சியான காட்சிகளில் அவர் காட்டிய நடிப்பாற்றலை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

குடும்ப பந்தங்களின் உறவுகளின் பரிதவிப்புகளின் மீது சிவாஜி கணேசனின் திரைக்கதைகள் புனையப்பட்டன. குலமகள் ராதை, ஊட்டிவரை உறவு என காதல் படங்களுக்கு அன்றே வசந்த மாளிகை அமைத்துக்கொடுத்தவர் சிவாஜி கணேசன்..!

நாயகனாக நடித்தாலும், இளைய நாயகனுக்கு இணையாக நடித்தாலும் சிவாஜி கணேசனின் நடிப்பும், வசன உச்சரிப்பும் எவராலும் எட்டிப்பிடிக்க இயலாதவை.

அதிகப்படியான நடிப்பை மட்டுமல்ல, யதார்த்தமான நடிப்பையும் தன்னால் வழங்க இயலும் என்று கலை ரசிகர்களுக்கு முதல் மரியாதை கொடுத்தார்

275 படங்களுக்கு மேல் நடித்த சாதனையுடன் கலைப்பயணத்தை ரஜினி, கமல், விஜய் போன்றோருடன் வெற்றிகரமாக தொடர்ந்தார் சிவாஜி கணேசன்.

ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் படங்களாக மட்டுமல்ல, பாடங்களாகவும் திகழ்கின்றன. பாமரன் முதல் படைப்பாளிகள்வரை அனைவரையும் நடிப்பாற்றலால் கட்டிப்போட்டதால்தான் சிவாஜியின் பெருமை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்றும் பேசப்படுகிறது என்றால் அது மிகையல்ல...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments